2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு இடம் வழங்கிய தனியார் பள்ளி

சென்னை: இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு தனியார் பள்ளி நிலம் வழங்கியது.  சென்னையில் முதல் வழித்தட மெட்ரோ ரயில் திட்டம் 45 கி.மீ தூரத்தில் தற்போது செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியது. 2ம் கட்ட திட்டப்பணிகள் 117.12 கி.மீ தூரத்திற்கு நடைபெற உள்ளது. இத்திட்டம் 3 வழித்தடங்களில் அமைய உள்ளது.   அதன்படி, மாதவரம்-சிப்காட் இடையில் 3வது வழித்தடம் 45.8 கி.மீ தூரத்துக்கும், 4வது வழித்தடம் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரையில் 26.1 கி.மீ தூரத்திலும், 5வது வழித்தடம் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையில் 47 கி.மீ தூரத்திலும் அமைய உள்ளது. மொத்தமாக 128 ரயில்நிலையங்கள் இந்த மூன்று வழித்தடங்களிலும் வர உள்ளது.

இத்திட்டத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, வழித்தடம் 3ன் பணிகளுக்காக நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் அமைந்துள்ள குட் ஷெப்பர்டு பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து 17,495 சதுர அடி நிலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தேவைப்பட்டது. எனவே, இதை பெறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து நிலத்தை வழங்க பள்ளி நிர்வாகம் ஒப்புகொண்டது. மேலும், இந்த நிலத்திற்குரிய இழப்பீட்டு தொகைக்கான காசோலையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் (இயக்கம் மற்றும் அமைப்புகள்) நரசிம் பிரசாத் பள்ளி நிராகத்தினரிடம் நேற்று வழங்கினார்.  மேலும், மிக நீண்ட நிலம் எடுப்பு சட்டநடைமுறையை பின்பற்றுவதைவிட எளிய நேரடி பேச்சுவார்த்தை மூலமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நிலத்தை தர நில உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Stories: