பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டோல்கேட்டுகளை மூடாவிட்டால் போராட்டம்: தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

சென்னை: சென்னை மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் நேற்று முன்தினம் மாலை தென்மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச் சங்கத்தின் 26வது நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கோபால் நாயுடு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள்  பங்கேற்றனர்.கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியதாவது: தென்மாநிலங்களில் உள்ள 112 சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக சரக்கு லாரிகளுக்கு சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக சரக்கு  லாரிகளில் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் இடங்களை அதிகப்படுத்த வேண்டும். ஒரே வரி, ஒரே இந்தியா என்பது போல, இந்தியா முழுவதிலும் ஒரே சுங்க வரி விதிக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்றும் பணி இன்னும் முடியவில்லை. எனினும், அங்கு சுங்க கட்டணம் வசூலிக்கின்றனர்.  இதுதொடர்பாக எங்களது 6 முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இந்த கோரிக்கைகள் மீது 2 அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் சரக்கு லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் தேதி குறித்து பெங்களூரில் நடைபெறும் சங்க கூட்டத்தில்  முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழக லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி, பாண்டிச்சேரி மாநில தலைவர் செந்தில்குமார், தெலங்கானா மாநில தலைவர் பாஸ்கர் ரெட்டி, கேரள மாநில தலைவர் ஹம்சா மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர்  யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: