ஈரானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் ஈரானில் வேகமாக பரவி வருவதால் தமிழர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் நாடு திரும்ப உதவுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது ஈரானையும் வாட்டி வதைக்கிறது. நேற்று வரை ஈரானில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஈரானில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் அங்கேய தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை சொந்த நாட்டிற்கு திரும்ப சென்று விடுமாறு படகுகளின் உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போதிய அளவில் விமானங்கள் இயக்கப்படாததால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

சீனாவின் வுஹான் நகருக்கும், ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு தனி விமானம் அனுப்பியது. இதே போல் ஈரானில் சிக்கி தவிக்கும் தங்களையும் மீட்டுவர சிறப்பு விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என்று மீனவர்களும், அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: