குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரம் சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு

சென்னை:  குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில், மாநில போலீசார் விசாரணையில் உண்மை மறைக்கப்படும் என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில், மனித நேய அறக்கட்டளை மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் படித்த 74 பேரில் 62 பேர் தேர்வாகி இருந்தனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.  இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குற்றச்சாட்டிற்கு உள்ளான பயிற்சி மையங்கள், ஆளுங்கட்சியை சார்ந்த செல்வாக்கு மிக்க நபரால் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படும் வினாத்தாள்களை பெற்று, தங்களுடைய பயிற்சி மையங்களில் படிப்பவர்கள் தேர்வுகளில் முறைகேடாக வெற்றி பெற உதவுகிறார்கள். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘‘டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. மேல் அதிகாரிகள் முதல் அடிமட்ட பணியாளர்கள் வரை இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சியின் தலைவருக்கும் இதில் தொடர்பு உண்டு. இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடன், தமிழக அரசு ஒரு அரசாணையை (ஜி.ஒ-98) பிறப்பித்து, மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  இந்நிலையில், அந்த அரசாணையின் அடிப்படையில், மாநில போலீசார் எப்படி விசாரிக்க முடியும். மனிதநேய அறக்கட்டளையும், அப்போலோ பயிற்சி மையமும் விடைத்தாள்களை திருத்தியுள்ளது. இது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது. குரூப் 1ல் தேர்வான 74 பேரில் 62 பேர் ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இதை மாநில போலீஸ் விசாரித்தால் உண்மைகள் மறைக்கப்படும். விடைத்தாள்களை தயாரிப்பவர்களின் தொலைபேசி எண்கள் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் கட்டுப்பாளருக்கு மட்டுமே தெரியும். அந்த எண் எப்படி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தெரிந்தது.

இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. எனவே, இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார். டிஎன்பிஎஸ்சி தரப்பில் மூத்த வக்கீல் வி.டி.கோபாலன் ஆஜராகி, ‘‘இதே போன்ற வழக்கு வேறு அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கின் விசாரணை நிலை என்ன’’ என்றார். அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘‘போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேறு அமர்வில் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கையும், அந்த வழக்குடன் சேர்ந்து விசாரிக்க பட்டிலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: