உலக வங்கியின் எச்சரிக்கையை தொடர்ந்து நீர்வளத்துறையில் தரக்கட்டுப்பாடு பிரிவுக்கு புதிய கோட்டங்கள் : தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், நீர்வளப்பிரிவு மூலம் ஏரிகள், அணைகள் புனரமைத்தல் புதிய தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஏரிகள் புனரமைப்பு, தடுப்பணை கட்டுதல், அணைகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் பணிகளை முடிக்காத நிலையிலேயே ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் தொகை செட்டில் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நீர்வள நிலவள திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் உலக வங்கி குழு சார்பில், பொதுப்பணித்துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொறியாளர்கள் நீர்வள நிலவள திட்டப்பணிகளை ஆய்வு செய்கின்றனரா என்று நீர் ஆய்வு நிறுவன தலைமை பொறியாளர் தட்சணாமூர்த்தியிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.மேலும், ஏரிகள் புனரமைப்பு பணிக்கு தரக்கட்டுப்பாடு பிரிவு சான்றிதழ் வழங்கினால் மட்டுமே இனி திட்டப்பணிகளுக்கான நிதி விடுவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நீர்வளப்பிரிவுக்கு தரக்கட்டுப்பாடு பிரிவுக்கு புதிதாக கோட்டங்கள் உருவாக்கம் செய்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 7 இடங்களில் தரக்கட்டுப்பாடு பிரிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தரக்கட்டுப்பாடு பிரிவு நீர் ஆய்வு நிறுவன தலைமை பொறியாளர் தலைமையில் செயல்படுகிறது. ஒவ்வொரு கோட்டங்களிலும் செயற்பொறியாளர்கள் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் 4 பேர், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் 17 பேர் என மொத்தம் 99 பேர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள், இந்த திட்டப்பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த கோட்டங்கள் மூலம் திட்டப்பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று சான்றிதழ் அளித்தால் மட்டுமே ஒப்பந்த நிறுவனத்திற்கு பில் தொகை செட்டில் செய்ய முடியும்.இதன் மூலம் திட்டப்பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிறது என்பதை உறுதி செய்ய முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: