மோடியின் ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்; போராட்டம் இந்தியர்களை காப்பாற்றுவதற்கான போர்...CAA-க்கு எதிரான மாநாட்டில் மு.க.ஸடாலின் பேச்சு

சென்னை: அரசியலமைப்புக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமான CAA, NRC, NPR ஆகியவற்றைக் கண்டித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டை YMCA திடலில் நடைபெற்று  வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியாவை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி உள்ளன. குடியுரிமை சட்டத்தை வைத்து அரசியல் செய்யும் அவசியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

குடியுரிமைச்சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் இந்தியர்களை காப்பாற்றுவதற்கான போர். CAA ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிக்கக்கூடியது. குடியுரிமையை நிரூபிக்க மத்திய அரசு கேட்கும் ஆவணங்களை சாமானிய மக்களால்  அளிக்க முடியாது என்பதால் தான் எதிர்க்கிறோம். உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி குடியுரிமை சட்டத்திருத்தக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

 

பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்துமே பிரச்சனைதான். தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டுக்கு மோடி அரசு அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவா?  என்று கேள்வி எழுப்பினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி முடங்கி கிடக்கிறது. திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

குடியுரிமை சட்டத்திருத்ததுக்கு எதிரான மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்து நாளிதழ் நிறுவனர் என்.ராம், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சாமி தோப்பு அய்யா வைகுந்தர் மடத்தின் தலைவர் பால  பிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: