கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி துவங்கியது: சீசனுக்குள் முடிக்க திட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் ரூ.50 லட்சம் செலவில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை சீசனுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கொடைக்கானல்- பழநி மலைச்சாலை 60 கிமீ தொலைவு கொண்டது. மிகவும் ஆபத்தான இந்த மலைச்சாலையில் 16 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்குள்ள அபாயகரமான வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலியாவது தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஆபத்தான வளைவுகளில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. . இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில் கூறியதாவது, ‘கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் ஆபத்தான வளைவுகள், விபத்து பகுதிகளை கண்டறிந்து சுமார் 1000 மீட்டர் அளவிற்கு ரூ.50 லட்சம் செலவில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன. முதலில் கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் இருந்து பிஎல் ஷெட் வரை ஒரு கட்டமாகவும், அடுத்து பிஎல் ஷெட் முதல் வடகவுஞ்சி வரை ஒரு கட்டமாகவும், அதற்கடுத்து மேல்பள்ளம் வரை ஒரு கட்டமாகவும் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

25 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை ஒவ்வொரு பகுதியிலும் அதாவது ஆபத்தான பகுதியில் வேலிகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது பெருமாள்மலை அடுத்த வெள்ளைப்பாறை பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. வரும் சீசன் காலத்திற்குள் இப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: