சிறப்பு ஆய்வு குழு கூட்டத்தில் மாமல்லபுரத்தை அழகுபடுத்த என்ன அம்சங்கள் விவாதிக்கப்பட்டது?: தமிழக அரசு அறிக்கைதர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர்  அடங்கிய அமர்வு, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி  குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. இக்குழு கூடி விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய  சுற்றுலாத்துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், வழிகாட்டிகளுக்கு விதிமுறைகள் வகுக்க இருப்பதாகவும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவையான நிதி  குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட  மத்திய மாநில அரசு அதிகாரிகளின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபரங்களை  அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அப்போது, தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, தொல்லியல்துறை அல்ல என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: