×

கொரோனா வைரஸ் பீதி பங்குச்சந்தைகள் கடும் சரிவு 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: கவலையில் முதலீட்டாளர்கள்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடு 800 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ₹3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், இதன் எதிரொலியாக சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. நேற்று அதிகபட்ச சரிவு ஏற்பட்டுள்ளது.டிரம்ப் இந்திய வருகையால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படும் என்ற நம்பிக்கை நிலவியது. இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு வரலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், நேற்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சரிய தொடங்கியது. வர்த்தக இடையில் 40,306.36 புள்ளிகள் வரை சரிந்தது.

முடிவில் சற்று ஏற்றம் பெற்றது. இருப்பினும் கடந்த வார இறுதியைவிட 806.89 புள்ளிகள் சரிந்து 40,363.23 ஆக இருந்தது. அனைத்து பங்குகளும் சரிவை சந்தித்தன. இருப்பினும் இன்போசிஸ், கோடக் மகிந்திரா வங்கி, எச்டிஎப்சி வங்கி பங்குகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, 251.45 புள்ளிகள் சரிந்து 11,829.40 புள்ளிகளாக இருந்தது.  கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகளில் முதலீடுகள் குறைந்து விட்டது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கி விட்டனர். கடந்த வார இறுதியில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு நேற்று ₹3,17,299.56 கோடி சரிந்தது.  சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததில் இருந்தே பங்குச்சந்தைகளுக்கு போதாத காலமாக உள்ளது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் இத்தாலி, ஈரான், தென்கொரியா நாடுகளுக்கும் பரவ தொடங்கி விட்டது. இதனால்தான் முதலீட்டாளர்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். வைரஸ் பாதிப்பு குறைந்தால்தான் இந்த நிலை மாறும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கி பங்குகள் மற்றும் ஆட்டோமொபைல், ஸ்டீல், பொதுத்துறை வங்கி பங்குகள், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் ஆகியவையும் சரிந்துள்ளன என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த 1ம் தேதி பட்ஜெட் தாக்கலின்போது மும்பை பங்குச்சந்தை 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதன்பிறகு நேற்று மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : investors ,Panic Stock Markets Slump , Corona virus, Stock Markets ,Slump,
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு