எதிர்க்கட்சிகள் தூண்டுதலால் போராட்டம் என குற்றச்சாட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இஸ்லாமிய கூட்டமைப்பு வாக்குவாதம்: மாற்றுப்பாதையில் எஸ்கேப் ஆனார்

திண்டுக்கல்: குடியுரிமை திருத்த சட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை கண்டித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை முற்றுகையிட முஸ்லிம்கள் திரண்டதால் அவர் மாற்றுப்பாதையில் விருந்தினர் விடுதிக்கு சென்றார். அங்கு  அவரிடம் மனு அளிக்க வந்த இஸ்லாமிய அமைப்பினரிடம் எதிர்க்கட்சிகள் தூண்டுதலால் போராட்டம் நடத்துவதாக அவர் கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறுமலை பகுதியில் பூங்கா அடிக்கல் நாட்டு  விழாவில் கலந்து கொண்டுவிட்டு  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நேற்று காலை திண்டுக்கல் வந்து கொண்டிருந்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை கண்டித்து அவரது காரை நாகல் நகர் பகுதியில் முஸ்லிம் பெண்கள் உள்பட ஏராளமானோர் முற்றுகையிடப் போவதாக தகவல் வந்தது. இதையடுத்து, மாற்றுப்பாதை வழியாக அவர்,  குடகனாறு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரை திண்டுக்கல் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் சந்தித்தனர்.குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அமைச்சர், போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டி விடுவதாக  அவர்களிடம் குற்றம் சாட்டினார். இதற்கு, அங்கு வந்திருந்த முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ‘‘நாங்கள் யார் சொல்லியும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எங்களது உரிமைக்காக தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’ என்று  தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: