743 கோடி செலவில் நடந்து வரும் நீர்வள நிலவள திட்டப்பணிகளை முடிக்க மே 31ம் தேதி வரை கெடு: உலக வங்கி நிதி நிறுத்திவைப்பு

சென்னை: ரூ.743 கோடி செலவில் நடந்து வரும் நீர்வள நிலவள திட்ட பணிகளை முடிக்க வரும் மே 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு–்ள்ளது. மேலும், இப்பணிகளுக்கு நிதியுதவி தருவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்,  தற்போது அரசு செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் (நீர்வள நிலவள திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இரண்டாவது பாகத்தில் ரூ.2131 கோடியில் 4778  ஏரிகள், 477 அணைக்கட்டுகளை புனரமைத்தல், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, கடந்த 2017ல் ரூ.743 கோடி செலவில்  22 மாவட்டங்களில் 1325 ஏரிகள், 107 அணைக்கட்டுகள் கட்டுதல், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, மேற்கொள்ள டெண்டர்  விடப்பட்டது. ஆனால், இப்பணிகளை ெதாடங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தால், தற்போது வரை பெரும்பாலான பணிகள் முடிவடையாத நிலையில், கடந்த நவம்பர் மாதத்துடன் உலக வங்கி விதித்த கெடு முடிவடைந்தது.

இதற்கிடையே, இரண்டாவது கட்டமாக தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் ரூ.643 கோடி 1200 ஏரிகள், 105 புதிய அணைகட்டுகள் கட்டுதல், 40 செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்க தமிழக அரசு சார்பில் கடந்த  நவம்பரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் உலக வங்கி குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அந்த குழுவினர் முதற்கட்ட பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெரும்பாலான பணிகள் முடிவடையாத நிலையில், இப்பணிகளுக்கு காலக்கெடு வழங்கவும்,  உடனடியாக நிதியை விடுவிக்கவும் பொதுப்பணித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து உலக வங்கி குழுவினர் சார்பில் இப்பணியை முடிக்க மே 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை  குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்த பிறகே நிதி விடுவிக்கப்படும் என்று திட்டவட்டமாக உலக வங்கி குழுவினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, தற்போது, அரசின் நிதியுதவியின் கீழ் முதற்கட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இருப்பினும் உலக வங்கி சார்பில் நிதி விடுவித்த பிறகே இரண்டாம் கட்ட பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: