பயமூட்டும் பாஸ்ட் புட் கடைகளால் அதிகரிக்கும் இயற்கை உணவகங்கள்: முன்னோர் வழியை நாடும் மனித குலம், விழிப்புணர்வும் அவசியம்

* குழந்தைகளுக்கு மந்த புத்தியை ஏற்படுத்தும் ‘ஜங்க் புட்’

* மலிவு விலை டேஸ்ட் மேக்கர்கள் கேன்சரை உருவாக்கும்

ஆதிமனிதன் இயற்கையாக விளைந்த காய்,  கனிகளை பச்சையாக உண்டு வாழ்ந்தான். ஒரு கட்டத்தில் கற்களின் உரசலில் பறந்த  நெருப்பு பொறிகள் அதன் மீது பட்டதும் சுவையை உணர்ந்து சுவைக்க ஆரம்பித்தது மனிதகுலம். தொடர்ந்து விறகுகளை கூட்டி, தீமூட்டி காய்கறிகளை உண்ண ஆரம்பித்த  போதே, மனித வாழ்வின் இயல்பான வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இயற்கையாக விளைந்த காய்கறிகளும், கம்பு, சாமை, கேழ்வரகு, சோளம், கோதுமை, சாமை, குதிரைவாலி, திணை போன்ற உணவு ரகங்களும்  மண்பாண்டங்கள் மற்றும் விதம் விதமான பண்டம்,  பாத்திரங்களில் தயாரித்து உண்பது வழக்கமானது. இப்படிப்பட்ட சூழலில் நாகரீகம் என்ற பெயரில், தமிழகத்தில் கடந்த 1990ம் ஆண்டு வாக்கில் உணவு முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.  காலையில் இட்லி, தோசை, மதியம் சாம்பார், ரசம், மோர், பொரியலுடன் அரிசி  சாதம், இரவில் தோசை, சப்பாத்தி என்று உண்பதை வழக்கமாக்கினர் மக்கள். ஆனால் இந்த  உணவுமுறையும் 2000ம் ஆண்டு வரை மட்டுமே இருந்தது.

2001ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் மேலை நாட்டு உணவு பழக்க,  வழக்கங்கள் மின்னல் வேகத்தில் பரவியது. இறைச்சி வகைகளின் மீது நாட்டம் அதிகமானதால் கறிக்கோழி பண்ணைகள் அதிகளவில் முளைத்தது. வெளிநாட்டு குளிர்பானங்கள், தனியாரால் பொரிக்கப்பட்ட ரெடிமேடு  சிக்கன், பாஸ்ட் புட் உணவகங்கள் என்று, இப்போது  திரும்பிய திசைகளில் எல்லாம் மசாலா வாசத்திற்கு அடிமையாகி நிற்கிறது மனிதகுலம். இதில் குறிப்பாக தமிழகத்தின் எந்த ஊரின் முக்கிய சாலை ஒன்றை எடுத்துக் கொண்டாலும்  ஆயிரம் மீட்டருக்கு ஒரு பாஸ்ட் புட் கடையும்,  சில்லி சிக்கன் கடையும் தென்படும்.  கண்ணை மறைக்கும் கலாச்சார மோகத்தால் தொடங்கிய இந்த உணவு முறை மாற்றத்தால், பல்வேறு நோய்களும் தாமாக வந்து மனிதர்களை தழுவிக் கொண்டிருப்பது வேதனையின் உச்சம். இதற்கு தீர்வு தான் என்ன? என்று பெரும் விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. செயற்கையை மறந்து, இயற்கையை நாடுவதே இதற்கான ஒரே தீர்வு என்பது உணவியல் ஆர்வலர்களின் ஆணித்தரமான வாதம். இதற்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில், இப்போது தமிழகம் முழுவதும் புறநகர் சாலைகளிலும், பெருநகரங்களின் பல்வேறு இடங்களிலும் முகம் காட்டிக் கொண்டிருக்கிறது இயற்கை உணவகங்கள். மண்பானை சமையல், தென்னந்தோப்பு சமையல், கிராமத்து விருந்து, அஞ்சறைப்பெட்டி, பாட்டிக்கடை பலகாரம் என்று பழமையின் பெயர்களில் இவை பந்தி பரிமாறிக் கொண்டிருக்கிறது. கண்ணைத் தொலைத்து விட்டு ஓவியத்தை ரசிக்க நினைப்பதில் மனிதர்களுக்கு நிகரானவர்கள் யாருமில்லை என்பதற்கு இந்த கடைகள் ஓர் சாட்சியங்கள்.

செயற்கை உணவால் நேர்ந்த சிரமங்களுக்கு இயற்கை உணவுதான் ஒரே தீர்வு என்று, இங்கும் மொய்த்துக் கொண்டிருக்கிறது மக்கள் கூட்டம். இந்த கடைகள் உண்மையிலேயே இயற்கை உணவை வழங்குகிறதா? அல்லது லாபத்திற்காக தூபம் போடுகிறதா? என்பதும் தற்போது விவாதமாக உருவெடுத்து நிற்கிறது. விறகால் மண்பானை சமையல் என்று கூறி, சிலிண்டரை அடுப்புக்கு அடியில் வைத்து படம் காட்டுவதும், அரியது என்று கூறி அதிகளவில் பணம் கறப்பதும் சில இடங்களில் தொடர்வதே இந்த சர்ச்சைமிகு விவாதத்திற்கு வழி வகுத்துள்ளது. குறைந்த நாளில் நிறைய சம்பாதித்துவிடவேண்டும், அதற்கு எதை புதுமையாக சொன்னாலும் நம்பி விடும் மக்கள் இருக்கும் வரை சாத்தியம் என்று நினைக்கும் குறுகிய புத்திகொண்ட சில வியாபாரிகளால் இத்தகைய சந்தேக, சர்சை விவாதங்கள் தொடர்கின்றன. ஆர்கானிக் உணவு என்றால் இது எப்படி ஆர்கானிக் என எந்தவித விசாரணையும் இன்றி அவர்கள் சொல்லும் கூடுதல் விலை கொடுத்து மக்கள் வாங்கி உண்கிறார்கள். பாட்டி சமையல், கிராமத்து விருந்து என பழங்கால சமையல் ருசியை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு பணத்தை பறித்து விட்டு ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.கேன்சர்களுக்கு வழி வகுக்கும் டேஸ்ட் மேக்கர்: நூடுல்ஸ், பிரைடு  ரைஸ், மஞ்சூரியன் வகைகள், சில்லிகள் தயாரிக்கும் கடைக்கார்கள் சுவைக்காக  மிளகாய், தக்காளி, சோயா சாஸ்கள், இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகள், டேஸ்ட்  மேக்கர் பவுடர், அஜினோமோட்டா ஆகியவற்றை உணவில் சேர்க்கின்றனர். உள்ளூர்  தயாரிப்புகளில் மலிவு விலையில் கிடைக்கும் தயாரிப்புக்களை வாங்கி  உபயோகிக்கின்றனர். இதனால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன.  அஜினோமோட்டா சுவைக்காக உணவில் சேர்ப்பதால், தொண்டையில் சதை வளர்வது  தொடங்கி, அலர்ஜி, குடல் புண், அல்சர், இரைப்பையில் கேன்சர் கட்டிகள்  ஏற்படுகிறது.

மாற்றம் ஏற்படுத்தும் ஜங்க் புட்: பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்ட ஜங்க் புட் சுவையாக  இருப்பதால், இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அதனை விரும்பி சாப்பிட்டு  வருகின்றனர். ஜங்க் புட் உணவுகளை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல்  மாற்றம் ஏற்பட்டு மனஅழுத்தம், பதற்றம், உடல்பருமன் ஏற்படுகிறது. இந்த வகை  உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டது. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு,  மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தமும் ஏற்படுகிறது. இதனால் உடற்பருமனில் தொடங்கி எல்லா வகையான  வியாதிகளும் வரிசைகட்டி நிற்கிறது. எனவே, எதனையும் ஆராய்ந்து உண்ண வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்கின்றனர் இயற்கை உணவியல் ஆர்வலர்கள்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க திணை கூழ்

தினை,  வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றில் வெண்பொங்கல், சர்க்கரை  பொங்கல், சாம்பார் சோறு, தேங்காய்சோறு, எலுமிச்சைசோறு, கூட்டாஞ்சோறு,  புளியோதரை, எள்ளுசோறு, புதினாசோறு, கீரைச்சோறு, காய்கறி பிரியாணி,  தயிர்சோறு போன்றவற்றை செய்யலாம். தினையில் கூழ் செய்து பிரசவமான தாய்க்கு கொடுப்பது தமிழர் மரபாக இருந்தது. தாய்ப்பால் அதிகம்  சுரக்கும் என்பதே இதற்கு காரணம்.  தினையில் கண்ணுக்கு ஒளிதரும்  பீட்டா கரோட்டினும் அதிகம். தினையை தொடர்ந்து உட்கொள்ளும் போது கண்பார்வை  பிரகாசமாகும். பசியை தூண்டும். மொத்தத்தில் தினை உட்கொள்வது உடலுக்கு  வலுசேர்க்கும் என்கின்றனர் இயற்கை உணவு தயாரிப்பாளர்கள்.

சர்க்கரை நோய்க்கு செக் வைக்கும் குதிரை வாலி

குதிரைவாலி  உட்கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். குதிரைவாலியோடு சற்றே  உளுந்து சேர்ந்து களியோ, கஞ்சியோ செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி,  வயிற்று கடுப்பு பிரச்னைகள் தீரும். காய்ச்சலின்போது குதிரைவாலி கஞ்சி  உட்கொள்வது மிகவும் நல்லது. இதேபோல்  சாமையில் மிகுந்துள்ள   இரும்புச்சத்து ரத்த சோகையுள்ளவர்களை குணப்படுத்தும். சாமையில் மினரல்ஸ்   அதிகமிருப்பதால் நம் உடலில் உயிரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக   உயர்த்திவிடும்.

உதிரப்போக்கை நிறுத்தும் கேழ்வரகு

கேழ்வரகில் கால்சியம்  அதிகம் இருப்பதால் மூட்டுவலி பிரச்னைக்கு தீர்வாகும். மாதவிடாயின் போதான உதிரப்போக்கை நிறுத்தவும் கேழ்வரகு வல்லதாகும். கேழ்வரகில் கஞ்சி, கூழ்,  களி, தோசை, அடை செய்து சாப்பிடலாம். உடலை உறுதிப்படுத்தும், பித்தத்தை  தணிக்கும். வாதத்தை கட்டுப்படுத்தும். வரகரிசி உடலில் சக்தியை பெருக்கும்.  வரகரிசியில் எல்லாவகை சோறுகளையும்,  பலகாரங்களையும், தின்பண்டங்களையும்  செய்யலாம். வரகு சுட்ட சாம்பல்  கர்ப்பிணி பெண்களின் ரத்தபோக்கை  நிறுத்துவதற்கு கிராமங்களில் இன்றும்  பயன்பாட்டில் உள்ளது.

Related Stories: