வனப்பகுதிகளில் கடும் வறட்சி வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி  ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர்  நிரப்பும் பணி நேற்று முதல் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக  வெளிவட்ட பகுதிகளான சிங்காரா, சீகூர், மசினகுடி உள்ளிட்ட வனப்பகுதிகளில்  கோடை காலங்களில் கடும் வறட்சி ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர்  தேடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி, நீரோடை, குட்டை, பள்ளிவளாகம், தேயிலை தோட்டங்களில்  உள்ளிட்ட வற்றையில் அவ்வப்போது உலா வருகிறது. இதனால் பொதுமக்களும்  அச்சத்திற்குள்ளாகின்றனர்.

இதனை தவிற்பதற்காக வனத்துறை சார்பில் கடந்த சில  ஆண்டுமுன் சாலையோர வனப்பகுதி, அடர் வனப்பகுதி, மித வனப்பகுதி ஆகிய  இடங்களில் 2000 லிட்டர் முதல் 15,000 லிட்டர் வரை கொள்ளளவு உள்ள 40க்கும்  மேற்பட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வனவிலங்குகளின் தாகம்  தணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது கோடை காலம் துவங்கும்  முன்பே, வனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு வனப்பகுதி நீரோடை, குட்டைகள்  வறண்டுபோயுள்ளது. மேலும் செடி, கொடி, மரம் காய்ந்து கருக தொடங்கி விட்டன.

இதனால்,  வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுப்பதற்காக  வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று  முதல் துவங்கியுள்ளது. இப்பணிக்காக தினசரி 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள்  மூலம் தேவைக்கு ஏற்ப தண்ணீர் நிரப்பும் பணிகள் வறட்சிக்காலம் முழுவதும்  நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: