மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் குமரி சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்:  மகா சிவராத்திரியையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி அன்று மாத சிவராத்திரி ஆகும். இதில் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இது சிவனுக்குரிய விரதமாகும். இந்த நாளில் கண் விழித்திருந்து சிவபெருமானை தரிசனம் செய்தால், நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். அதன்படி நேற்று மகா சிவராத்திரி ஆகும். இதையொட்டி நேற்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நாளில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை பக்தர்கள் மாலை அணிந்து, நோன்பு இருந்து ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும்.  சிவராத்திரியையொட்டி,  முதல் சிவாலயமான புதுக்கடை அருகே முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் நேற்று முன் தினம் அதிகாலை முதலே சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் தொடங்கினர். காவி வேட்டி, இடுப்பில் துண்டு, கையில் விசிறி, சுருக்கு பையில் விபூதி ஆகியவற்றுடன் திருமலை மகாதேவரை தரிசித்து விட்டு, ‘கோவிந்தா... கோபாலா...’ என்று கோஷமிட்டவாறு  பயணத்தை தொடங்கிய பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிந்தா, கோபாலா என்ற முழக்க மந்திரத்துடன் சிவாலயங்களை நோக்கி பயணித்தனர்.

திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோயில், பந்நிப்பாகம் சந்திர மவுலீஸ்வரர் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு காலகாலர் கோயில், திருவிடைக்கோடு சடையப்ப நாதர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் ஆகிய கோயில்களுக்கு பகல் மற்றும் இரவில் ஓடியும், நடந்தும் தரிசித்த பக்தர்கள், நேற்று மாலை 12 வது சிவாலயமான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில், தங்களது பயணத்தை நிறைவு செய்தார்கள். இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவபெருமானை தரிசித்த பக்தர்கள், இன்று தங்களது விரதத்தை நிறைவு செய்கிறார்கள்.

நடை பயணமாக மட்டுமின்றி, நேற்று அதிகாலை முதல் பைக், கார்களில் சென்று 12 சிவாலயங்களையும் தரிசிப்பதற்காக பக்தர்கள் திரண்டனர். 12 சிவாலயங்களிலும் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழிநெடுக சிவாலய பக்தர்களுக்கு குளிர்பானங்கள், பழங்கள் உள்ளிட்டவை பொதுமக்களால் வழங்கப்பட்டன. இது தவிர குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. இரவு 10 மணிக்கு தொடங்கிய பூஜைகள், அதிகாலை 2 மணி வரை நீடித்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவாலயங்களில் மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டு இருந்தன. முக்கிய சிவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

Related Stories: