×

இனி வங்கி ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காது

* வாங்கிக்கொள்ளப்படும்; தரப்பட மாட்டாது
* 1ம் தேதி முதல் அமல்

மும்பை: வங்கி ஏடிஎம்களில் இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காது என்று  இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இதுபோல, வங்கியில் ₹2 ஆயிரம் நோட்டுக்கள் பெறப்படும்; திரும்ப தரப்பட மாட்டாது; அதற்கு பதில், மற்ற ₹500, 200 மற்றும் 100 நோட்டுக்கள் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் இப்போதெல்லாம் ₹2000 நோட்டுக்கள் கிடைப்பதில்லை. அதனால் இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கி தடை செய்யப்போகிறதா என்று கூட பலரும் பேசி வருகின்றனர். உண்மையில், 2000 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் வைக்க வேண்டாம் என்றே வங்கிகள் அறிவுறுத்துவதாக தெரிகிறது.   இது தொடர்பாக இந்தியன் வங்கி  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏடிஎம்களில் ₹2000 நோட்டுக்களை பொதுமக்கள் விரும்பவில்லை. ஏடிஎம்களில் எடுத்தால், அவற்றை சாதாரணமாக கடைகளில் தந்து மாற்ற முடிவதில்லை. அவர்கள் பலரும்  வங்கி கிளைகளுக்கு சென்று மாற்றித்தருமாறு கேட்பது வாடிக்கையாகி  வருகிறது.
இதை தடுக்கவே, படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் குறைத்து விடுவது என்று  முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 1 ம் தேதி முதல் முழுமையாக வங்கி ஏடிஎம்களில் ₹2 ஆயிரம் நோட்டுக்கள் வைக்கப்பட மாட்டாது.
இனி, குறைந்த மதிப்புள்ள ₹500, 200 மற்றும் 100 நோட்டுக்கள் தான் வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மாநிலம் விட்டு மாநிலம் வந்து பிழைக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும், குறைந்தபட்ச மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை தான் தங்கள் பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் தான் ₹2000 நோட்டுக்களை ஏடிஎம்களில் இனி வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதியில் இருந்து ரூ. 2000 நோட்டுக்கள் ஏடிஎம்களில் வைக்கப்பட மாட்டாது. இதற்கேற்ப, ஏடிஎம்களில் மாற்றம் செய்யப்பட்டு, ₹2000 நோட்டுக்களை விநியோகிக்கும் வசதி இருக்காது. ஏடிஎம்களில் இனி ₹500, 200 மற்றும் 100  மதிப்புள்ள நோட்டுக்கள் தான் கிடைக்கும். மேலும், ₹2000 நோட்டுக்களை வங்கியிலும் தரப்பட மாட்டாது. 1ம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கி கொள்ளப்படும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ₹2 ஆயிரம் நோட்டுக்களை தரப்பட மாட்டாது. மாறாக, அவர்–்களுக்கு அதற்கு கீழ் குறைந்த மதிப்புள்ள நோட்டுக்கள் வழங்கப்படும்.
இவ்வாறு இந்தியன் வங்கியின் டிஜிட்டல் பேங்கிங் பிரிவு பொது மேலாளர் ரங்கராஜன் கூறியுள்ளார்.

₹2000 நோட்டுக்கு தடையா?
₹1000 புது நோட்டு வருதா?
பரபரப்பாக  பேசப்படும் ₹2 ஆயிரம் நோட்டுக்கள் விவகாரத்தில் இன்னும் தெளிவில்லாத  நிலை நீடிக்கிறது. ₹2 ஆயிரம் கரன்சி நோட்டுக்கள் தடை செய்யப்படப்போகிறதா? படிப்படியாக நிறுத்தப்படப் போகிறதா? என்ற கேள்வி மர்மமாகவே நீடிக்கிறது. சமீப காலமாகவே ₹2 ஆயிரம் கரன்சி  நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது.  இதில் தெளிவில்லா நிலை தொடர்ந்தால், இந்த நோட்டுக்களை வாங்கும் கடைகள் கூட  வாங்காமல் இருக்க வாய்ப்புண்டு என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஏடிஎம்களில் மட்டுமின்றி, வங்கியில்  பரிமாற்றப்படும் நோட்டுக்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டு விடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதற்கு மாற்றாக ₹1000 நோட்டு வரும் என்றும் பேசப்படுகிறது.


Tags : bank ,ATMs. , 2000 banknotes , no longer, available, bank ATMs
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...