×

ஏஜிஆர் கட்டண பாக்கியில் 1,000 கோடி செலுத்தியது வோடபோன்

புதுடெல்லி: ஏஜிஎஸ் கட்டண பாக்கியில் 2வது தவணையாக 1,000 கோடியை வோடபோன் - ஐடியா நிறுவனம் நேற்று செலுத்தியது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு மற்றும் அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 1.47 லட்சம் ஏஜிஆர் நிலுவை முழுவதையும் அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் செலுத்த உத்தரவிட்டது.

ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி வோடபோன் ஐடியா 2,500 கோடி, ஏர்டெல் 10,000 கோடி, டாடா குழுமம் 2,190 கோடி செலுத்தின. இந்நிலையில், 2வது தவணையாக கட்டண பாக்கியில் 1,000 கோடியை வோடபோன் ஐடியா நிறுவனம் நேற்று செலுத்தியதாக, தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுவரை ஏஜிஆர் கட்டணமாக 16,000 கோடி செலுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் இன்னும் ஒரு வாரத்தில் செலுத்த உறுதி அளித்துள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு முடிவு எடுக்கும்’’ என்றார்.

Tags : Vodafone ,AGR , Vodafone paid, Rs 1,000 crore, AGR tariff packs
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...