×

7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்; ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் : முதல்வர் பழனிசாமி உறுதி

சென்னை : 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்; ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 2020- 2021ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.

ஆளுநரின் முடிவு தான் என்ன ?

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

காரசார விவாதம்

இந்நிலையில் நான்காவது நாளான இன்று (19/02/2020) சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஆகியோர் இடையே நடைபெற்ற காரசார விவாதம் பற்றி காண்போம்.

துரைமுருகன் : அமைச்சரவையின் முடிவே இறுதியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகும் 7 பேர் விடுதலை தாமதம் ஏன் ?. ஆளுநர் என்பவர் மாநில அரசின் அங்கமே தவிர, மத்திய அரசின் பிரதிநிதி இல்லை.

அமைச்சர் சண்முகம் : பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலையில் மாற்றுக் கருத்து இல்லை. ஜெயலலிதாவின் எண்ணமும் அதே தான்.ஆளுநர் அதிகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என சட்டம் இல்லை.ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது.7 பேரையும் விடுவிக்க அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்தையும் செய்துவிட்டோம்.அமைச்சரவை முடிவை பற்றி அரசும் ஆளுநரிடம் தெரிவித்துவிட்டது.

ஸ்டாலின் : விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு சொல்ல வேண்டுமே என்று நீதிமன்றம் தெரிவித்ததே ?

முதல்வர் பழனிசாமி : நாங்கள் அக்கறையில் இருப்பதால் தான் தீர்மானம் நிறைவேற்றினோம்.விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம். அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியுள்ளோம். ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். ஆளுநரின் நல்ல முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.

துரைமுருகன் : தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளை விரைவில் விடுதலை செய்தது ஏன் ?

அமைச்சர் சண்முகம் : 3 மாணவிகளை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யவில்லை என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.


Tags : Palanisamy ,Governor , Liberation, Chief Minister, Palanisamy, Rajiv Gandhi, Murder, Stalin, Duraimurugan, Shanmugam
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு