அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை பெற்ற பிறகு தற்பொழுது 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாபதி மனுதாக்கல் செய்திருக்கிறார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அயனாவரம் சிறுமி வழக்கில் தண்டனையை ரத்து செய்ய கோரும் உமாபதி மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கானது பல இடங்களிலும் மிக முக்கியமாக பார்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எவ்வித தீர்ப்பு வரும் என்பதை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் எலக்ட்ரிஷினாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றிய நிலையில், தன்னை இந்த வழக்கில் பிளம்பர் என குறிப்பிட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தன் மீதான முதல் தகவல் அறிக்கையில் தன்னுடைய பெயர் இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், அயனாவரம் சிறுமி முன்னுக்கு பின் முரணான வாக்குமூலத்தை விசாரணையின் போது கொடுத்து தன்னை இந்த வழக்கில் இணைத்திருக்கிறார்கள். எனவே தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த மேல்முறையீட்டு மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று நீதிபதி கொங்கியப்பன் மற்றும் சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது 5 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உமாபதி தரப்பில் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், உமாபதியின் மனு மீது அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Related Stories: