தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக தண்டராம்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். அப்போது, தென்பெண்ணை ஆற்றை கடந்து சென்று, அகரம் பள்ளிப்பட்டு கிராமம் வழியாக மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரும்போதும், பாசன தேவைக்காக ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்போதும் தொண்டமானூர் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி செல்ல அச்சப்படுகின்றனர். இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு பகுதி வழியாக சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டும். இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தொண்டமானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அல்லது மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், பழைய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்று தண்ணீரில் இறங்கி நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, தென்பெண்ணை ஆற்றில் பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: