425 கிராம பஞ்சாயத்துகள் பிரிப்பு இரு மாவட்ட வார்டு மறுவரையறை பட்டியல் வெளியீடு: நெல்லை - 204, தென்காசி - 221

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சிகளின் வார்டு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 425 கிராம பஞ்சாயத்துகள் பிரிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் 204 கிராம பஞ்சாயத்துகளும், தென்காசி மாவட்டத்தில் 221 பஞ்சாயத்துகளும் இடம் பெற்றுள்ளன. நெல்லை மாவட்டம் 10 சட்டசபை தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகள், 16 தாலுகாக்களுடன் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி தனி மாவட்டம் கடந்த நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்கள், 5 சட்டசபை தொகுதிகள், தென்காசி மாவட்டத்தில் 8 தாலுகாக்கள், 5 சட்டசபை தொகுதிகள் என மாவட்டம் பிரிக்கப்பட்டது. எனினும் ஊரக உள்ளாட்சிகளை பிரிப்பதில் சிக்கல் நிலவி வந்தது.

ஒரு சில ஊராட்சி ஒன்றியங்களில் தங்கள் ஊராட்சிகளை பிரித்து அடுத்த ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க எல்லையோர கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மானூர் யூனியன் கிராம பஞ்சாயத்துகளை பிரித்து பாப்பாக்குடி யூனியனில் சேர்க்க எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக இரு முறை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளின் மறு வரையறை பட்டியலை நெல்லை மாவட்ட மறுவரையறை அலுவலரும், கலெக்டருமான ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட மறுவரையறை அலுவலரும், கலெக்டருமான அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் ெவளியிட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களும், தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியல் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 41 கிராம பஞ்சாயத்துகள் இருந்தன. இதில் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 9 கிராம பஞ்சாயத்துகள் தற்போது மானூரில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த சங்கன்திரடு, மேலக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம், பழவூர், சீதபற்பநல்லூர், வெள்ளாளன்குளம் ஆகிய 7 கிராம பஞ்சாயத்துகள் நீக்கப்பட்டு பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது 43 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. பாப்பாக்குடி யூனியனில் மொத்தம் 15 கிராம பஞ்சாயத்துகள் இருந்தன. இதில் குத்தப்பாஞ்சான், ஓடைமறிச்சான், புதுப்பட்டி, மருதம்புத்தூர் ஆகிய 4 கிராம பஞ்சாயத்துகள் நீக்கப்பட்டு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டன.

சாட்டுபத்து கிராம பஞ்சாயத்து நீக்கப்பட்டு அம்பை ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 7 கிராம பஞ்சாயத்துகள் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தற்போது பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 17 கிராம பஞ்சாயத்துகள் இடம் பெற்றுள்ளன. அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கெனவே 12 கிராம பஞ்சாயத்துகள் இருந்த நிலையில் சாட்டுபத்து சேர்ப்பால் 13 கிராம பஞ்சாயத்துகளாக எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாளையங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த கிராம பஞ்சாயத்துகள் அப்படியே நீடிக்கின்றன.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கெனவே 28 கிராம பஞ்சாயத்துகள் இருந்தன. இதில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 கிராம பஞ்சாயத்துகள் ஆலங்குளத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. குருவிகுளத்தில் 43 கிராம பஞ்சாயத்துகள் ஏற்கெனவே இடம் பெற்றிருந்தன. இதில் 4 கிராம பஞ்சாயத்துகள் நீக்கப்பட்டு மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை 39ஆக குறைந்துள்ளது.

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கனவே 25 கிராம பஞ்சாயத்துகள் இருந்தன. தற்போது குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 கிராம பஞ்சாயத்துகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 9 கிராம பஞ்சாயத்துகள் நீக்கப்பட்டு மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம பஞ்சாயத்துகள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியல் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

25ம் தேதி கருத்து கேட்பு கூட்டம்

வார்டுகள்  மறுவரையறை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியோரிடமிருந்து வருகிற 22ம் தேதி வரை ஆட்சேபனைகள் பெறப்படுகிறது. மாவட்ட மறுவரையறை  அலுவலரான கலெக்டர் வருகிற 25ம் தேதி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின்  கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை பெறுகிறார்.

Related Stories: