மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலையில் விடுவிக்கப்பட்ட 13 பேருக்கு நிபந்தனைகள் வாபஸ்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட 13 பேர் வேலூரில் தங்கியிருக்க வேண்டுமென்ற முந்தைய நிபந்தனையை ஐகோர்ட் கிளை திரும்ப பெற்றது. மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் படுகொலையான வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம் உள்ளிட்ட 13 பேர், கடந்தாண்டு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகவில்லை.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘விரைவாக முடிக்க வேண்டிய வழக்கில் மூத்த வக்கீலான மனுதாரர் ேபாதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த செயல் நீதிமன்றத்திற்கு வலியை தருகிறது. இடைக்கால உத்தரவின் மூலம் இழுத்தடிக்கும் செயலாக இருக்கலாம். எனவே, வேறு வழியின்றி, இந்த நீதிமன்றம் கடந்தாண்டு நவ. 27ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், கூறப்பட்டுள்ள வேலூரில் தங்கியிருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் திரும்ப பெறுகிறது. மனு மீதான விசாரணை மார்ச் 16க்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: