கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே விபத்து தடுப்புச்சுவரில் கார் மோதி தே.மு.தி.க. செயலாளர் உள்பட 2 பேர் சாவு

பொள்ளாச்சி:    பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (36).  பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய மேற்கு பகுதி தே.மு.தி.க. செயலாளராகவும், தனியார் டிவி நிருபராகவும் இருந்தார். கோவை மாவட்ட போட்டோகிராபர் அசோசியேசன் பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.  இவர் நேற்று  முன்தினம் நள்ளிரவு செந்தில்குமார் (35),  பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு  படிக்கும் கிஷோர் (19), அருண்,  மணிகண்டன் ஆகியோருடன் கோவையில் உள்ள போட்டோகிராபர் அசோசியேசனை சேர்ந்த  சிலருக்கு காலண்டர் வழங்க காரில் புறப்பட்டார். காரை  சந்திரசேகர் ஓட்டி வந்துள்ளார்.  கோவையில் உள்ள சங்க உறுப்பினர்கள்  சிலருக்கு காலண்டர் வழங்கிவிட்டு கிணத்துக்கடவில் உள்ள ஒரு  நபரை பார்க்க சென்றனர். அந்த நபர் செல்போனை எடுக்காததால், காரில்  பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிணத்துக்கடவை கடந்து  தாமரைக்குளம் வந்தபோது, காரிலிருந்து அருண், மணிகண்டன் ஆகிய இருவரும்  அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடிப்பதற்காக இறங்கினர்.

 

இதையடுத்து,  கிணத்துக்கடவை சேர்ந்த நபரை பார்ப்பதற்காக சந்திரசேகர், கிஷோர், செந்தில்குமார் ஆகியோர் மீண்டும் கிணத்துக்கடவு நோக்கி புறப்பட்டனர். கிணத்துக்கடவு  மேம்பாலத்தை கடந்து வந்தபோது பாலம் அருகே இணைப்பு சாலை பராமரிப்பு  பணிக்காக, சிதறி கிடந்த கற்கள் மீது கார் ஏறியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவர்  மீது மோதி  ரோட்டில் உருண்டது.  காரின்  இடிபாடுகளுக்குள் சிக்கி சந்திரசேகர், கிஷோர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செந்தில்குமார் படுகாயம் அடைந்தார்.  கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: