தேர்தல் பணத்தை பங்கு போடுவதில் தகராறு அதிமுக பெண் எம்எல்ஏவுக்கு ஒன்றிய செயலாளர் பளார்: மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன். இவர் முன்பு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தார். எம்.எல்.ஏ ஆன பின், கணவர் முருகனை ஒன்றிய தலைவர் ஆக்க முடிவு செய்தார். இதற்காக அவரை மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வார்டு எண் 4ல் போட்டியிட செய்தார். 14 லட்சம் வரை பரமேஸ்வரி கொடுத்து சில கிராமங்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளையும் வாங்குவதற்கு பேசி முடித்தார். அதே வார்டில் திமுக சார்பில்தர் போட்டியிட்டார். கடுமையான போட்டியில் திமுக வேட்பாளர் தர் வெற்றிபெற்று ஒன்றிய தலைவரானார். பல லட்சங்கள் செலவு செய்தும் குறிப்பிட்ட கிராமங்களில் தனது கணவருக்கு யாரும் ஓட்டு போடவில்லை என்பதை அறிந்த எம்.எல்.ஏ. பரமேஸ்வரி ஆத்திரம் அடைந்தார்.

ரிசல்ட் வெளியான மறுநாளே பணம் கொடுத்தவர்களுக்கு போன் செய்து, ‘‘என் கணவருக்கு ஓட்டு போடவில்லை. வாங்கிய பணத்தை கீழே வையுங்கள். பணத்தை வசூலிக்க நானே நேரில் வருவேன். என் கணவரெல்லாம் வேஸ்ட். நானே வருவேன்’’ என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, இந்த அம்மா எம்.எல்.ஏ. ஆகி தொகுதிக்கு என்ன செய்தார், இதுல இவங்க கணவரும் பதவிக்கு வர ஆசைப்படுறாங்க என்று அதிமுகவினரே எதிர்ப்பு குரல் கொடுத்தனர். மண்ணச்சநல்லூர் தொகுதியில் 23 ஊராட்சி தலைவர் பொறுப்புகள் எம்.எல்.ஏ விடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கான பணமும் அவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் பரமேஸ்வரி, பணத்தை யாருக்கும் கொடுக்கவில்லை. தன் கணவர் போட்டியிட்ட வார்டில் மட்டும் பல லட்சங்களை செலவு செய்துவிட்டு, மீதி பணத்தை அவரே சுருட்டிக்கொண்டாராம்.

இதை அறிந்த ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.விடம் சென்று பணம் கேட்டு உள்ளார். அப்போது அவருக்கும் ஓரளவு பணம் கொடுத்து வாயை அடைக்க பார்த்துள்ளார். மேலிடத்தில் இருந்து பெரிய தொகை வந்துள்ளது. எனக்கு இவ்வளவு தானா என ஜெயக்குமார் கேட்ட போது, தேர்தல் முடியட்டும் உனக்கு மேலும் பணம் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணிக்கு பாக்கி பணத்தை கேட்க ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மண்ணச்சநல்லூரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் சென்றார். அங்கு எம்.எல்.ஏ. பரமேஸ்வரி இருந்தார்.

வெளிவராண்டாவில் அவரது கணவர் முருகன், உதவியாளர் ராமமூர்த்தி உள்பட 6 பேர் இருந்தனர். எம்.எல்.ஏ இருந்த அறைக்கு சென்ற ஒன்றிய செயலாளர், தேர்தல் முடிந்து விட்டது. பேசியபடி பாக்கி பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது எம்.எல்.ஏ., தேர்தலில் என்னத்த கிழிச்ச, உனக்கு பணம் தருவதற்கு? என ஒருமையில் பேசி திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.  இதில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. பரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயக்குமார், அதே வேகத்தில் திருப்பி எம்.எல்.ஏவின் கன்னத்தில் 2 அறையும், 2 குத்தும் விட்டார். இதனால் நிலை குலைந்து போன எம்.எல்.ஏ நாற்காலியில் சாய்ந்து மயங்கினார்.

இதையடுத்து ஒன்றிய செயலாளர், அங்கிருந்து வேகமாக வெளியே சென்று விட்டார். அவர் போன வேகத்தை கண்டதும் எம்.எல்.ஏவின் கணவர் முருகன் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பரமேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளார். விழித்து எழுந்தவரிடம் என்ன நடந்தது என முருகன் கேட்டபோது தன்னை ஒன்றிய செயலாளர் தாக்கி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து எம்.எல்.ஏவின் ஆட்கள், ஒன்றிய செயலாளரை தேடி போய் உள்ளனர். ஆனால் அவர் சிக்கவில்லை. இதுபற்றி போலீசில் புகார் செய்தால் அசிங்கம் என கருதிய எம்.எல்.ஏ, திருச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் தங்கமணிக்கு இது குறித்து போன் மூலம் தகவல் தெரிவித்தார். சட்டசபை கூட்டம் நடக்கிறது. இதுபோன்ற பிரச்னை வேண்டாம். சென்னைக்கு வந்து விடுங்கள் ஒன்றிய செயலாளரை நேரில் அழைத்து விசாரிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அதன்பேரில் எம்.எல்.ஏ நேற்றுமுன்தினம் இரவு சென்னை புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுடன் சென்னையில் முகாமிட்டுள்ளார். முதல்வரையும், துணை முதல்வரையும் நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து அவர் புகார் செய்ய முடிவு செய்து உள்ளார்.

Related Stories: