நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் 6வது பிரதான சாலையில் டவர் பூங்கா அருகிலுள்ள நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள், ஓட்டல், கடைகளில் முகப்பு கூரை உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் மண்டல அலுவலர் சுந்தரராஜன், செயற் பொறியாளர் வைத்தியலிங்கம், உதவி பொறியாளர்கள் தேவதாஸ், சேகர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மேற்கண்ட பகுதிக்கு வந்தனர். அங்கு, நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த தள்ளுவண்டிகள், நடைபாதை கடைகள், ஓட்டல்கள் என சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் 70க்கும் மேற்பட்ட கடைகளை அதிரடியாக அகற்றினர். இந்த பகுதியில் மீண்டும் கடைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தனர்.

Related Stories: