செங்குன்றம், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்கள் தவிப்பு

புழல்: செங்குன்றம், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். சென்னை செங்குன்றம் அடுத்த பொத்தூர் கலைஞர் கருணாநிதி நகர், காந்திநகர் சந்திக்கும் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை பகுதியில் இருந்து சோலையம்மன் நகர், காந்திநகர், ஆலமரம், திருவள்ளூர் கூட்டு சாலை, நேதாஜி சிலை அருகே வரை சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் கழிவுநீரை, மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.

திருவள்ளூர் நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், கழிவுநீரில் கால் வைத்தபடியே செல்வதால் தொற்று நோய் ஏற்படும் ஆபத்துள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

எனவே, நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாய் உடைப்பு உடனடியாக சீரமைக்க வேண்டும். சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: