×

மதுரையை சுற்றி 8 தேசிய சாலை, 3 மாநில சாலைகளை இணைக்கும் திட்டம்: நீண்ட தூக்கத்தில் 83 கி.மீ. நீள ‘அதிவேக அவுட்டர் ரிங்ரோடு’

மதுரை: மதுரையை சுற்றி 8 தேசிய சாலை, 3 மாநில சாலைகளை இணைக்கும் 83 கி.மீ. நீள அதிவேக அவுட்டர் ரிங்ரோடு திட்டம் நீண்டகாலமாக தூங்குகிறது. புற்றீசலாக பெருகும் வாகன நெருக்கடியை இன்னும் 10 ஆண்டில் உத்தங்குடி- கப்பலூர் இடையிலான இன்னர் ரிங்ரோடு தாங்காது, மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்று போக்குவரத்து நிபுணர் குழு எச்சரித்துள்ளது.

மதுரையை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் சென்னை சாலை, ராமேஸ்வரம் சாலை, தூத்துக்குடி சாலை, கன்னியாகுமரி சாலை, பெங்களூரு சாலை, தேனிவழியாக குமுளி சாலை, குற்றாலம் சாலை, புதிதாக நத்தம் சாலை ஆகிய 8 சாலைகள் உள்ளன. சிவகங்கை ரோடு, அழகர்கோவில் சாலை, அலங்காநல்லூர் ஆகிய 3 சாலைகள் மட்டுமே மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. இந்த சாலைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் மதுரையை சுற்றி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வெளி வட்டவடிவ சாலை (அவுட்டர் ரிங்ரோடு) அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. இந்த சாலை அமையும் பகுதிகள் சேட்லைட் படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டு, முடிவு செய்யப்பட்டு உத்தேச வரைபடமும் தயாராயின.

இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் அனுமதி அளித்தது. இந்த வட்ட சாலை திண்டுக்கல் ரோட்டில் தாதம்பட்டி, நத்தம் ரோட்டில் மந்திகுளம், அழகர்கோவில் சாலையில் இரணியம், திருச்சி ரோட்டில் சிட்டம்பட்டி அருகிலும், சிவகங்கை ரோட்டில் பறைகுளம், ராமேஸ்வரம் ரோட்டில் மணலூர், தூத்துக்குடி ரோட்டில் எலியார்பத்தி, திருநெல்வேலி ரோட்டில் சிவரக்கோட்டை, ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி ஆகிய இடங்களில் இடம்பெற்று இருந்தது. உத்தேசமாக மார்க் செய்து கற்களும் நடப்பட்டு இருந்தன.

வைகை ஆற்றின் குறுக்கே ஒரு மேம்பாலமும், ராமேஸ்வரம், திருநெல்வேலி செல்லும் ரயில் தண்டவாளங்களின் குறுக்கே 2 பெரிய மேம்பாலங்களும், ஆங்காங்கே தேவையான சிறிய பாலங்களும், சுரங்கப்பாதைகளும் அமைக்க வரை படத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதன்மூலம் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரூ போன்ற நகரங்களுக்கோ, வடமாவட்டங்களுக்கோ, அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கோ செல்லும் லாரி, டிரக்கர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தேவையின்றி மதுரை நகருக்குள் நுழைய வேண்டியது இருக்காது, அதிவேக வட்ட சாலையில் இருந்து மதுரை நகருக்குள் திரும்பும் பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டது. அவுட்டர் ரிங்ரோட்டின் மொத்த சுற்றளவு தூரம் 83 கி.மீ.. இதில் வாகனங்கள் 100 கி.மீ.க்கு மேல் செல்லும் அதிவேக அகன்ற சாலையாக வடிவமைக்க திட்டம் தயாரானது. தேவைப்படும் இடங்களில் நில ஆர்ஜித பணியை தமிழக அரசு முடித்து ஒப்படைக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்தது. ஆனால் அந்த திட்டத்தின் கதி என்ன ஆனது? என்றே தெரியாமல் பல ஆண்டுகளாக நீண்ட தூக்கத்தில் முடங்கி கிடக்கிறது.

இந்த திட்டத்திற்கான ஆய்வு நடத்திய தொழில்நுட்ப குழுவினர் கூறும்போது, “தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி, மதுரை சரவதேச விமான நிலையம், புது தொழிற்சாலை உருவாகும்போது மதுரையை கடக்கும் வாகன எண்ணிக்கை அபரிமிதமாக உயரும். இன்னும் 10 ஆண்டுகளில் வாகன பெருக்கத்தை உத்தங்குடி- கப்பலூர் ரிங்ரோடு தாங்காது. இதில் இப்போதே பெரிய டிரக் லாரிகள் கடந்து செல்வது கடினமாக உள்ளது. எனவே தொலைநோக்கு பார்வையுடன் அவுட்டர் ரிங்ரோடு திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் நிறைவேற தவறினால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பது நிபுணர் குழுவின் எச்சரிக்கையாகும், அதை உதாசீனப்படுத்தினால் மோசமான விளைவுகள் உருவாகும்” என்றனர்.

Tags : Madurai ,State Roads ,National Road ,Length 'High Speed Outer Ring Road , Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...