தேனி அருகே வாட்ஸ்அப்பில் ஆணுடன் மோதல்: ‘டிக்டாக்’ பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கிராமத்தினர்

தேனி:  தேனி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி (32), சென்னை சினிமா கம்பெனியில் மேக்கப் பெண்ணாக உள்ளார். இவர், சமூக வலைத்தளமான டிக்டாக்கில் மதுரை சுகந்தி என்னும் பெயரில் பல பாடல்களுக்கு  நடித்து அதனை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால், மதுரையை சேர்ந்த அய்யர்பங்களா மீனாட்சி, ஒத்தக்கடை கயல்விழி ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.  பின்னர், இவர்களுக்குள் கருத்துமோதல் ஏற்பட்டு காவல்நிலையத்தில் பஞ்சாயத்து  நடந்தது. இதற்கிடையே சுகந்திக்கும் ஒரு ஆணுக்கும் வாட்ஸ்அப்பில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சுகந்தியை அவதூறாக பேசியதுடன், நாகலாபுரம் கிராம பெண்களையும் அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில்  பரவியது.

இதனையறிந்த கிராமமக்கள் கடந்த வாரம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் சுகந்தி மீதும், அவரை அவதூறாகப் பேசுவதாக நினைத்து, தங்கள் கிராமத்து பெண்களை அவதூறாக பேசிய நபர் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் மூலமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இந்நிலையில், நாகலாபுரத்தில் கிராம மக்கள் நேற்று ஒன்று கூடி, தங்கள் கிராமத்தையும், கிராமத்துப் பெண்களையும்  அவமானப்படுத்திய சுகந்தியுடன் யாரும், எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

இதுகுறித்து சுகந்தியின் சகோதரி கணவர் மணிகண்டன் கூறுகையில், ‘‘சுகந்தியால் என் குடும்பம் பிரிந்துள்ளது. அவரது செயலால், உடன் வசிக்கும் என் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.  அவர்களிடமிருந்து என் குழந்தைகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டுள்ளேன்’’ என்றார்.

Related Stories: