பொதுநல சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் காவல் நிலையம் கட்ட மக்கள் பலத்த எதிர்ப்பு: ஆதம்பாக்கத்தில் பரபரப்பு

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் பொது நலச்சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் காவல் நிலையம் கொண்டு வர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதம்பாக்கம் மண்ணடியம்மன்  கோயில் தெருவில் பொதுநல சங்கத்திற்கு சொந்தமான 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இடம் உள்ளது.கடந்த 1940ம் ஆண்டு முதல் இங்குள்ள கட்டிடத்தில் இரவு பாடசாலை நடத்தப்பட்டு வருவதுடன் பிறந்தநாள் விழா, காதுகுத்தும் விழா, திருமண வரவேற்பு  போன்ற சிறுசிறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்ததாகவும்  தற்போது இந்த இடத்தை சுற்றியுள்ள மதில் சுவர் பழுதடைந்துள்ளதால் இதனை இடித்து விட்டு மீண்டும் சுவர் எழுப்ப உள்ள  நிலையில் இந்த இடத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு பொது நல சங்க நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு  கிளம்பியது.  இதனையடுத்து  மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன் மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களை  காவல் நிலையத்துக்கு அழைத்து     சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர். ஆனால், அங்கு வந்த ஊர்  பெரியவர்கள் முத்து, விஜயன், பிரகாஷ், பூவராகவன் ஆகியோர் ஏழை, எளிய மக்களின்  கல்விக்காகவும், சின்ன சின்ன விசேஷங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த இடத்தினை விட்டு கொடுக்க முடியாது என உறுதியாக கூறினர்.

அப்போது உதவி கமிஷனர் சவுரிநாதன், ‘‘ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில்  போதிய வசதி இல்லாததால்  இதனை வேறு இடத்திற்கு மாற்ற  இடம் கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த இடத்தினை பரிந்துரை செய்துள்ளனர்.வெறும் 2 ஆயிரம் சதுர அடி மட்டும் நீங்கள் கொடுத்தால் போதுமானது.  மேலும் காவல் நிலையம் வருவது உங்களுக்குத்தான் பெருமை’’ என்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ஊர்மக்கள்  வேறு இடத்தை பாருங்கள்.  அதற்கு நாங்கள்  ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறிவிட்டு  கையெழுத்து போடாமல் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஆதம்பாக்கம் பொதுநல சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஒரு சிறிய தெருவில் காவல் நிலையம் கொண்டு வருவது நியாயமில்லை.  இந்த பகுதியில் காவல் நிலையம் வந்தால் ஒரே கூட்டமாக இருக்கும். வழக்கு சம்மந்தமான வாகனங்களை கண்ட இடத்தில் நிறுத்தி விடுவார்கள்.  மேலும் ஹாக்கி விளையாட்டு திடலை வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி விடுவார்கள். பழமையான ஹாக்கி மைதானம் இல்லாமல் போய்விடும்’’ என்றார்.

Related Stories: