குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 19ம் தேதி தலைமை செயலகம் முற்றுகை: இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு

சென்னை: இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கை: வண்ணாரப்பேட்டையில்  பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும்.

இப்போராட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும், அதே போல் மற்ற மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்திடவும், தமிழகத்தில் அனைத்து இஸ்லாமிய சமூக, அரசியல் அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி காஜா மொய்தீன் பாகவி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதே போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைமையிடமும் தொலைபேசி மூலம் இந்த போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாகவும், தேச மக்களை பொதுவாகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் சி.ஏ.ஏ,வை எதிர்ப்பதோடு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள முற்றுகை போராட்டங்கள் அனைத்திலும், அனைத்து முஸ்லிம் சமுதாய, அரசியல் அமைப்புகளோடு இணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்கும். சென்னையில் பிப் 19ம் தேதி நடைபெறும் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டடத்தில் நாங்கள் பங்கேற்கிறோம்.

Related Stories: