கழிவுநீர், குப்பைகளால் மாசுபடுகிறதா?..தாமிரபரணியில் 12 இடங்களில் மத்தியக் குழு ஆய்வு: மார்ச் 16ல் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை

நெல்லை: வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கழிவுநீர், குப்பைகள் கலப்பதால் மாசுபடுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி 12 இடங்களில் மத்தியக் குழுவினர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பான அறிக்கை மார்ச் 16ல் தாக்கல் செய்யப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி 130 கிமீ தூரம் பயணம் செய்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இதுதவிர நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 36 டவுன் பஞ்சாயத்துகள், 828 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி உள்ளது. தெளிந்த நீரோடையாக கண்ணாடிபோல் காட்சியளித்த தாமிரபரணி ஆற்றில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் தண்ணீர், இன்று கருப்பு நிறத்தில் கலங்கலாக மாறியுள்ளது. ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த வக்கீல் முத்துராமன், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த தீர்ப்பாயம், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பது குறித்தும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நெல்லை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகிய 5 பேர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுதொடர்பாக நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி உதயகுமார், நெல்லை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரொமால்ட் டெரிக் பிண்டோ, பொதுப்பணித்துறை, மாநகராட்சி உதவி பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 12 இடங்களில் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஆய்வு நடத்தினர். இந்தக் குழுவினர் பாபநாசம், அம்பை, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, நெல்லை குறுக்குத்துறை, கொக்கிரகுளம், மணிமூர்த்தீஸ்வரம், நாரணம்மாள்புரம் ஆற்றுப்பாலம், மணப்படைவீடு, சீவலப்பேரி உள்ளிட்ட 12 இடங்களில் ஆய்வு செய்து அந்தந்த பகுதிகளின் தாமிரபரணி ஆற்று நீரை சேகரித்தனர். இந்த ஆற்று நீர் மாதிரியை நெல்லையில் உள்ள சுற்றுச்சூழல் தர ஆய்வகத்தில் பரிசோதனை செய்து ஆற்று நீரில் என்னென்ன நச்சுக்கள், மாசுக்கள் கலந்துள்ளது, இதை தடுக்க வழி என்ன, குப்பைகள் கொட்டுவதை எப்படி தடை செய்வது என்பது குறித்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை மார்ச் 16ம் தேதி ெதன்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்கின்றனர்.

18 ஆண்டுகளாக இழுபறி

நெல்லை மாநகராட்சியில்தான் பல இடங்களில் தாமிரபரணி தண்ணீர் கடுமையாக மாசுபடுகிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆய்வர்களும் கூறும் கருத்து, நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாது என்பதுதான். இதற்காக 2002ம் ஆண்டு ஒரு பகுதியாக மட்டும் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் பகுதி 2, 3 என்று இன்று வரை 18 ஆண்டுகளாக இழுபறியாகவே உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேறினால் மட்டுமே தாமிரபரணி ஆற்றை கழிவுகளில் இருந்து மீட்டெடுக்க முடியும்.

Related Stories: