போராட்டக்காரர்கள் போலீசார் நோக்கி ஆவேசமாக சென்றதுதான் பிரச்னைக்கு காரணம்: வீடியோ வெளியிட்டு போலீசார் விளக்கம்

சென்னை: அமைதியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசாரை நோக்கி  போராட்டக்காரர்கள் ஆவேசமாக செல்கின்றனர். அதன் பின்னர் தான் பிரச்னை ஆரம்பமானதாக போலீசார் வெளியிட்ட வீடியோவில் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் நேற்று முன்தினம் முதல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டப்பட்டது. அதில் அமைதியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல் துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் ஆவேசமாக செல்வதும் அதன் பின்னர் தான் பிரச்னை ஆரம்பமானதாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

சிசிடிவி காட்சிகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசே, மத்திய அரசே வாபஸ் பெறு, வாபஸ் பெறு என்று கோஷங்கள் எழுப்பி கொண்டு இருந்தனர். அப்போது பேருந்தில் இருந்து போலீசார் இறங்குவதை கண்ட போராட்டக்காரர்கள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி முன்நோக்கி செல்லும்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் முன்நோக்கி சென்றதையடுத்து தடுப்பு வேலி கீழே விழுந்தது. இதனால் போலீசார் போராட்டக்காரர்களை ஒவ்வொருவராக பிடித்து இழுக்கின்றனர். அதன்பிறகு போலீசார் கூட்டத்திற்குள் சென்று அவர்களை பிடித்து இழுக்கின்றனர். அப்போது கூட்டத்திற்குள் இருந்து கற்கள் வீசப்படுவதை கண்ட போலீசார் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றனர். தடுப்புகள் எதுவும் இல்லாததால் போலீசார் அங்கிருந்து வெளியேறுகின்றனர். இந்த காட்சிதான் வீடியோவில் இருந்தது.

Related Stories: