பதிவு கட்டணத்தை குறைத்து பத்திரப்பதிவு செய்ததில் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

* நூதன முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள்

* ஐஜி அலுவலகம் உரிய விசாரணை நடத்துமா?

சென்னை:விதிகளை மீறி கட்டணத்தை குறைத்து பத்திரப்பதிவு செய்ததில் பல ஆயிரம் கோடி பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இந்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி கூட வருவாய் எட்ட முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பதிவுத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்து பதிவு செய்வதாக இருந்தால் 1 சதவீதம் முத்திரைத்தீர்வை மற்றும் 1 சதவீதம் பதிவு கட்டணமும், அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 4 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இதில், குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்தாக இருந்தாலும், அதற்கு மேல் மதிப்பில் உள்ள சொத்தாக இருந்தாலும் சரி ரூ.25 ஆயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்டு பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு கூட குடும்ப உறுப்பினர்கள் எனக்கூறி கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நாகை, மயிலாடுதுறை பதிவு மாவட்டங்களில் பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் கூட குடும்ப உறுப்பினர்கள் எனக்கூறி மேலிடம் தரப்பில் பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சார்பதிவாளர்கள் மற்றும் மேலிட அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.

இது போன்ற பதிவின் காரணமாக பதிவுத்துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நடப்பாண்டில் பத்திரப்பதிவுத்துறை ரூ.13,123 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தற்போது பத்திரப்பதிவு அதிகரித்துள்ள நிலையில், சட்ட விரோதமாக பதிவுக்கட்டணம் இது போன்று, குறைவாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதே பெரும் சவாலான காரியமாகி உள்ளது.

இந்த நிலையில் பத்திரப்பதிவு வருவாயை பெருக்க வேண்டுமென்றால் இது போன்ற சட்ட விரோதமான பதிவு செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவின் வருவாயை பெருக்க முடியும். மேலும், இது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஐஜி ஜோதி நிர்மலாசாமி முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அப்போது தான் சார்பதிவாளர் அலுவலங்களில், நடைபெறும் முறைகேடு வெட்ட வெளிச்சத்திற்கு வரும். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை வசூலித்து சரிக்கட்ட முடியும் என்று பதிவுத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: