தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவுக்கு மூடு விழா: நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்துக்கு 4 தலைமை பொறியாளர்கள் நியமனம்

சென்னை: நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகத்துக்கு 4 தலைமை பொறியாளர்கள் உட்பட 17 பேரை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அணைகள், ஏரிகள் புனரமைத்தல், புதிய நீர்த்தேக்கம் மற்றும் அணைகட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த 2018 டிசம்பர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த கழகத்தில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாநில நீர்வள மேலாண்மை முகமை இணைக்கப்பட்டுள்ளது. இந்த கழகம் மூலம் குடிமராமத்து திட்டம், நதிகள் இணைப்பு திட்டம், கால்வாய்கள் இணைப்பு திட்டம், வெள்ளதடுப்பு திட்டபணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.100 கோடிக்கு மேலான திட்டப்பணிகள் மட்டுமே இந்த பிரிவு மூலம் செய்யப்படுகிறது. இந்த கழகம் மூலம் நிதி கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பெரும்பாலான பணிகள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கழகத்துக்கு புதிய பணியிடங்கள் நியமிக்கப்படாததால் எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கழகம் 4 மண்டலங்களக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்கு ஒருவர் வீதம் 4 தலைமை பொறியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதை தவிர்த்து 2 கண்காணிப்பு பொறியாளர், 2 செயற்பொறியாளர், 1 கம்பெனி செயலாளர். 1 நிதி ஆலோசகர், 1 ஏஜிஎம் (நிதி), 1 ஏஜிஎம் (நிர்வாகம்), 3 உதவியாளர் உட்பட 17 பேரை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கழகத்தின் மூலம் இனி வருங்காலங்களில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படவிருப்பதால், இனி பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு மூடு விழாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: