முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு இனிமேல் சீருடை கட்டாயம்: புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அரசு விழா ஏற்பாடுகளில் பங்கேற்கும் தமிழக பொதுப்பணித்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அரசு கடும்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சீருடை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் அரசு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாதாரண உடையில் பங்கேற்கும்போது அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், சில நேரங்களில் அடையாளம் தெரியாத காரணத்தால் விழா அரங்கில், நிகழ்வில் பொதுப்பணித்துறை ஊழியர்களை போலீசார் அனுமதிப்பதில்லை. இதனால், போலீசாருக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. மேலும், சில நேரங்களில் சமூக விரோதிகளும் விழா ஏற்பாடு அலுவலர்கள் எனக்கூறி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விழாவில் உள்ளே புகுந்து விடுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், அரசு விழா ஏற்பாடுகளில் ஈடுபடும் பொதுப்பணித்துறை அலுவலர், பணியாளர்களை அடையாளம் காண நீல நிற தொப்பி உடன் கூடிய சீருடை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் அனைத்து மண்டல தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித்துறை மூலமாக அனைத்து கட்டுமான பணிகள் மற்றும் மிக, மிக முக்கிய/முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் அரசு விழா ஏற்பாடுகள், பொதுப்பணித்துறை அலுவலர்கள்/ பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான அரசு பணிகளிலும் மற்றும் அரசு விழா ஏற்பாடு பணிகளில் பொதுப்பணித்துறையின் அலுவலர்கள்/ பணியாளர்கள் ஏற்கனவே, உடுத்தியுள்ள உடைக்கு மேல், நீல நிறத்தில், முன்பகுதி, பின்பகுதியில் பொதுப்பணித்துறை (PWD) என வாசகம் அச்சிடப்பட்ட பாதுகாப்பு மற்றும் அடையாள அட்டை (Safety and Identity jacket) மற்றும் பொதுப்பணித்துறை என அச்சிடப்பட்ட தலை உறையை (Cap) இனி வரும் காலங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: