டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்த 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குரூப் 2ஏ, குரூப்4 தேர்வுகளில் முறைகேடு செய்து வேலைக்கு சேர்ந்ததாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ  தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து, பலர் பணியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து, 40கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து, முறைகேட்டில் தொடர்புடைய பலர் நீதிமன்றங்களில் நாள்தோறும் சரணடைந்து வருகின்றனர்.  இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வில் 9 லட்சம் கொடுத்து வெற்றி  பெற்று வேலூர் மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த வினோத் குமார் மற்றும் குரூப் 4 தேர்வில் தலா  7 லட்சம் கொடுத்து வெற்றி பெற்ற கடலூரை சேர்ந்த னிவாசன் மற்றும் அவரது உறவினர் ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது, இவர்கள் வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க நேரிடும். இது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று வாதிடப்பட்டது. இதனைதொடர்ந்து நீதிபதி மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: