டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கடந்த வாரம் கூறி இருந்தார். இதற்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதனால், இதுபற்றிய அறிவிப்பு இன்று சட்டப்பேரவை தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தனி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, சட்ட ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தனி சட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு இந்த திட்டத்தால் பிரச்னை வருமா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சட்டம் வந்தால், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், எரிவாயு குழாய் பதிப்பு உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: