ஏப்ரலில் காலியாகும் 3 எம்பி பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி: தேமுதிகவும் ஒரு சீட் கேட்பதால் சிக்கல்

சென்னை: ஏப்ரலில் காலியாகும் 3 மாநிலங்களவை எம்பி பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதே நேரத்தில் தேமுதிகவும் ஒரு  சீட்  கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முத்து கருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன்,  ஏ.கே.செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா  சத்யானந்த் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள  எம்எல்ஏக்களின் பலத்தில் அடிப்படையில்  திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

 இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் இந்த பதவியை  பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது.ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்கள் இந்த பதவியை  எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில் கடந்த முறை 3  மாநிலங்களவை எம்பிக்கள் நெல்லை, தூத்துக்குடி  மாவட்டத்தில் இருந்து ஜெயலலிதா தேர்ந்தெடுத்தார். ஆனால், இந்த முறை அதே போல் 3 பேரை  தென்மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  அதிமுகவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது, நெல்லை மாவட்டத்தில் தமிழக அமைச்சர்கள்  யாரும் இல்லை. அதே போல், கன்னியாகுமரி மாவட்டத்திலும்  இல்லாத நிலை தற்போது இல்லை. இதனால், எம்பி பதவியாவது வழங்க வேண்டும் என்று  அந்த பகுதியில் உள்ளவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  

அதிமுகவிலேயே இப்படி பிரச்னை இருந்து வருகிறது.இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை   தர வேண்டும் என்று தற்போது கோரிக்கை வலுத்துள்ளது. இதனால், 3 மாநிலங்களவை பதவியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் அதிமுகவில் குழப்பம் நீடித்து   வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேமுதிக கேட்ட ஒரு மாநிலங்களவை சீட்டை ஒதுக்காத நிலையில் அவர்கள், கூட்டணியை விட்டு   விலகி விடுவார்களோ? என்ற பயம் வேறு அதிமுகவில் இருந்து வருகிறது. இதனால், அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட தொடங்கியுள்ளது.

Related Stories: