சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் அனுமதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருக்கும் 9 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் மிகவும் பழமையான நீதிமன்றங்களுள் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றாகும். இது கடந்த 1862ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தமிழக மாநிலத்திற்கும், புதுவை யூனியன் பிரதேசத்திற்கு சேர்த்து ஒரே உயர்நீதிமன்றமாக இது செயல்பட்டு வருகிறது. இங்கு 74 நீதிபதிகள் மற்றும் ஒரு தலைமை நீதிபதியை நியமிக்கலாம். அதன்படி தற்போது உயர்நீதிமன்றத்தில் 56 நிரந்தர நீதிபதிகளும் கூடுதலாக 19 நீதிபதிகளும் உள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க கொலிஜியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பிடி உஷா, நிர்மல் குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன், புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய 9 நீதிபதிகள் கூடுதல் நீதிபதிகளாக தற்போது பணியாற்றி வருகின்றனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்றத்தின் கொலிஜீயத்துக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 12ம் தேதி கூடிய கொலிஜீயம், இந்த 9 கூடுதல் நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இந்த 9 நீதிபதிகளும் விரைவில் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: