குஜராத் மாநிலத்தை பதம்பார்த்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது: தமிழக வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் உறுதி

சென்னை: குஜராத், ராஜஸ்தான்,  மாநிலங்களை பதம்பார்த்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது என்று தமிழக வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் பூச்சியியல் பன்மைத்துவமும், பாதுகாப்பு முறைகளும் என்ற இரண்டு நாட்கள் கருத்தரங்கம் தொடங்கியது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங், தமிழகத்தை பொறுத்தவரை வெட்டுக்கிளிகளுக்கு சாதகமான தட்ப வெப்பநிலை இல்லை. ஆதலால் வெட்டுக்கிளிகளின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது என்று அவர் உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ககன்தீப் சிங், பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் மாற்றாக நம்மை செய்யும் பூச்சிகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வாரம் திடீரென லோகஸ்ட் வகையைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை நாசம் செய்தன. இந்நிலையில் சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் தற்போது வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. அடுத்தகட்டமாக தெற்கு சூடான், உகாண்டா மற்றும் எரித்திரியா நாடுகளுக்கும் வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான FAO தெரிவித்துள்ளது. தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து விமானம் மூலம் பூச்சி மருத்து தெளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. தானியங்களோடு புற்களையும் வெட்டுக்கிளிகள் கபளீகரம் செய்வதால் வளர்ப்பு கால்நடைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஒருபோதும் தமிழகத்தில் இருக்காது என்று தமிழக வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: