டி20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் தலைமறைவாக இருந்த 2 பைனான்சியர்கள் கைது

சென்னை: மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு, 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த 2 பைனான்சியர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேற்கு இந்திய தீவுகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் போது, சென்னையில் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடப்பதாக வேப்பேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேப்பேரி போலீசார் நடத்திய விசாரணையில், சூளை நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் மாடியில் ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து போலீசார் சூதாட்டம் நடந்த கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சூதாட்டத்தில் ஈடுபட்ட சவுகார்பேட்டையை சேர்ந்த ராகுல் டிஜெயின் (24), தினேஷ் குமார் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹53 லட்சம், லேப்டாப்கள், செல்போன்கள், பணம் எண்ணும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்பட்ட புரசைவாக்கம் சுந்தரம்லேன் பகுதியை சேர்ந்த பைனான்சியர்களான அக்‌க்ஷய்(26), விக்ரம்(29) அகியோர் தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த பைனான்சியர்களான அக்க்ஷய் மற்றும் விக்ரமை நேற்று முன்தினம் இரவு உதவி ஆய்வாளர் குமார், துரைராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: