பரங்கிமலை ராணுவ அகாடமிக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த மனநோயாளி அட்டகாசம்: போலீசார் விசாரணை

ஆலந்தூர்: பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் அகாடமியில் நேற்று காலை ஒரு மர்ம நபர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டார். அவரை பரங்கிமலை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை பரங்கிமலையில் இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடமி (ஓடிஏ) இயங்கி வருகிறது. இந்த மையத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆங்காங்கே சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ஒரு மர்ம நபர் அங்குள்ள மதில்சுவரை தாண்டி உள்ளே குதித்தார். பின்னர் அங்கு பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்து, பயிற்சி வீரர்களிடம் இந்தியில் பேசி அடாவடியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு அரைகுறை ஆடைகளுடன் சுற்றி திரிந்த மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அவர் ஜார்கண்ட் மாநிலம், யுபாடா கிராமத்தை சேர்ந்த சரண் பிஸ்ரா (33) என்பதும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, ஜார்கண்ட் வாலிபரின் பெற்றோர் குறித்து ராணுவத்தினரும், போலீசாரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: