அரசு இணையதளத்தில் இருந்த அசாம் என்ஆர்சி தகவல் மாயம்: தொழில்நுட்ப கோளாறு காரணம் என உள்துறை அமைச்சகம் விளக்கம்

கவுகாத்தி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசாம் என்ஆர்சி தகவல் தெரியவில்லை எனவும், இது பாதுகாப்பாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதிப்பட்டியல் கடந்தாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் www.nrcassam.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதில், பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் விவரங்களும் இருந்தன. இந்த விவரங்களை கடந்த டிசம்பர் 15ம் தேதியில் இருந்து இணையதளத்தில் பார்க்க முடியவில்லை. அவை திடீரென மாயமாகி விட்டன.  

அசாம் என்ஆர்சி பட்டியலை இந்திய பதிவாளர் ஜெனரல் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்று அறிவிக்காத நிலையில், இணையதளத்தில் இந்த பட்டியல் மாயமானது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாகதான் அசாம் என்ஆர்சி பட்டியல், அரசு இணையதளத்தில் தெரியவில்லை. இருப்பினும், அந்த தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு வருகிறது,’ என கூறியுள்ளது.

இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து என்ஆர்சி.யின் அசாம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிதேஸ் தேவ் சர்மா அளித்த பேட்டியில், ‘‘அசாம் என்ஆர்சி பட்டியல் மிகப்பெரிய புள்ளி விபரங்களை ‘கிளவுட் சர்வீஸ்’ மூலம் விப்ரோ நிறுவனம் வழங்கியது. இந்த நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்து விட்டது. அதை, எனக்கு முன்பு இருந்த ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா, புதுப்பிக்கவில்லை. நான் கடந்த டிசம்பர் 24ம் தேதிதான் பதவியேற்றேன். இந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான முடிவு கடந்த மாதம் 30ம் தேதி எடுக்கப்பட்டு, விப்ரோ நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. விப்ரோ தனது சேவையை அளித்தவுடன், அசாம் என்ஆர்சி பட்டியலை அரசு இணையதளத்தில் மக்கள் மீண்டும் பார்க்கலாம்,’’ என்றார். இதை விப்ரோ உறுதி செய்துள்ளது.

Related Stories: