தளி அருகே வனத்தையொட்டிய கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை: தளி அருகே வனத்தை ஒட்டிய கிராமப்பகுதியில், சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பேளாளம் கிராமத்தின் அருகே, கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது, சாலையில் சென்றவர்கள் தங்களது செல்போனில் சிறுத்தையை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்த தகவல் பரவியதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆச்சுபாலம், லட்சுமிபுரம், தின்னூர், கீசககுப்பம், லம்பாடிதொட்டி, சத்திரம்தொட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். இதை தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த ஜவளகிரி வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தளியை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பன்னார்கட்டா வனப்பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமுள்ளன. வழக்கமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் மட்டுமே வசிக்கும் சிறுத்தைகள், தற்போது தளியை ஒட்டிய கிராமப்பகுதியில் நடமாடுவதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: