அண்ணாநகரில் தொடர் கைவரிசை நகை கடை கொள்ளையனிடம் 1 கிலோ தங்க நகை பறிமுதல்

அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன். இவர் மீது தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் பிரபல நகை கடையின் சுவரை துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், பெங்களூரு நீதிமன்றத்தில்  முருகன் சரணடைந்தார்.

பெங்களூருவில் முருகன் மீது  பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு மீண்டும் பெங்களூரு சிறையில் அடைத்தனர். இதையடுத்து, திருச்சி போலீசார் முருகனை போலீஸ் காவலில் எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, நகைகளை  பறிமுதல் செய்தனர். பின்னர் மீண்டும் அவரை பெங்களூரு சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர்ந்து 17 வீடுகளில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்குகளில் திருவாரூர் முருகன் மூளையாக செயல்பட்டது தெரிந்தது. இந்த வழக்கில், முருகனின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

இதனால், அண்ணாநகர் போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் பெங்களூரு சிறையில் இருந்த முருகனை சென்னை அழைத்து வந்து கடந்த 7 நாட்களாக விசாரித்தனர். அப்போது, கொள்ளையடித்த 1 கிலோ நகைகள், மதுரை மற்றும் திருச்சியில் வைத்திருப்பதாக தெரிவித்தார். உடனே, முருகனை மதுரை மற்றும் திருச்சிக்கு அழைத்து சென்று 1 கிலோ 60 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவல் முடிந்து முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெங்களூரு சிறையில் அடைக்க உள்ளனர்.

Related Stories: