மக்காச்சோள கழிவுக்கு வைத்த தீயால் 25 ஏக்கரில் அவரை, துவரை செடிகள் எரிந்து நாசம்: விவசாயிகள் கவலை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே மக்காச்சோள கழிவுக்கு வைத்த தீயால், 25 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த அவரை, துவரை செடிகள் எரிந்து நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது பொட்டிபுரம். 200 வீடுகள் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பம்புசெட் கிணறு மற்றும் பருவமழையை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. மானாவாரி நிலங்கள் அதிகமுள்ள இங்கு மக்காச்சோளம், பருத்தி, துவரை, அவரை, சோளம் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மக்காச்சோளம், அவரை, துவரை சாகுபடி செய்தனர். மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை சாலையில் கொட்டி பிரித்தெடுத்து வருகின்றனர். சாலையோரம் கிடந்த மக்காச்சோள கழிவுகளுக்கு நேற்று மாலை மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். தீ மளமளவென அருகிலுள்ள வயலுக்கு பரவி பற்றி எரிந்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமங்கலம் நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இரவு 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 25 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த அவரை, துவரை செடிகள் எரிந்து நாசமாகின. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மக்காச்சோளம் அறுவடை முடிந்த நிலையில் அவரை, துவரை விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. சமூக விரோதிகள் வைத்த தீயில் இவைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: