பக்கிங்காம் கால்வாய் கரையோர குப்பை குவியலில் தீ விபத்து : கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள குப்பை குவியலில் தீவிபத்து ஏற்பட்டதால், சுற்றுப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். திருவொற்றியூர் பகுதியில் உள்ள சில தனியார் கம்பெனிகளில் சேரும் குப்பை கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் குப்பை குவிந்து கிடப்பதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பை கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து வருவதால், இந்த பகுதியில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், திருவொற்றியூர் வெற்றி விநாயகர் நகர் பக்கிங்காம் கால்வாய் கரையில் குவிந்து கிடந்த தனியார் கம்பெனியின் பிளாஸ்டிக் கழிவுகளில் நேற்று திடீரென தீப்பிடித்தது. காற்றில் தீ மளமளவென பரவியதால் சுற்றுப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் சிரமப்பட்டனர். இதுபற்றி அறிந்த திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். பின்னர், திருவொற்றியூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன்பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Related Stories: