புழல் மத்திய சிறையில் ஈரான் கைதியிடம் செல்போன் பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், ஈரான் கைதியிடம் இருந்து செல்போன், சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. புழல் தண்டனை சிறைச்சாலையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளில் சிலர் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தண்டனை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், சிறையிலுள்ள சோதனை கண்டறியும் குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முதல் வகுப்பு பிரிவில் உள்ள கழிவறையில் ஆண்ட்ராய்டு செல்போன், பேட்டரி சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்தனர்.  விசாரணையில், ஈரான் நாட்டை சேர்ந்த முகமது  ஜிப் பாணி (35) என்பவர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கடந்த  2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தண்டனை சிறை கைதியாக இருப்பதும், இந்த செல்போன் அவருடையது என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விலை உயர்ந்த செல்போன் எப்படி உள்ளே வந்தது. இதற்கு சிறைக்காவலர்கள் உடந்தையா அல்லது வெளியிலிருந்து வீசப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: