அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு முற்றுகை: மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கைது

சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் ஆய்வுக்குச் சென்றபோது அங்கு மலைவாழ் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அதில், ஒரு சிறுவனை அழைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது செருப்பை கழட்டி விடும்படி கூறினார். அந்த சிறுவனும் வந்து செருப்பை  கழட்டி விட்டான். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அவர் மீது  போலீசிலும் புகார் செய்யப்பட்டன. இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, செருப்பை கழட்டி விட்ட சிறுவன் மற்றும் பெற்றோர் சந்தித்து, வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதோடு தங்களது கிராமத்துக்கு உதவிகள்  செய்வதாக அமைச்சர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டினப்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீடு முன்பு முற்றுகைப் போராட்டம்  நடைபெறும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்தது. இதனால், பட்டினப்பாக்கம் பஸ்நிலையம் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று பகல் 11 மணிக்கு பஸ் நிலையம் அருகே திரண்டு, முதல்வர் வீட்டை நோக்கி  புறப்பட்ட 55 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: