கொரோனா வைரஸ் எதிரொலி: எங்களை காப்பாற்றி நாட்டிற்கு அழைத்து செல்லுங்கள்...கப்பலில் சிக்கிய இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை

டோக்கியோ: கொரோனா வைரஸ் வேகமாக உலகளவில் பரவி வரும் நிலையில், சீன அரசாங்கம் கடந்த 24 மணி நேர சுகாதார பாதிப்பு குறித்த அறிக்கையில், வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 73 பேர் பலியான நிலையில்,  தற்போதைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த சுற்றுலா கப்பலில் இருந்த 5,400 பயணிகளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  அதனால், டோக்கியோவிற்கு வெளியே உள்ள துறைமுக நகரமான யோகோகாமாவில் இரண்டு பயணக் கப்பல்களையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள், 2 வாரகாலம் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர  கண்காணிப்புக்கு பின்னரே, துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, யோகோமாகா துறைமுகத்தில் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டது. முதற்கட்டமாக, 356 பேருக்கு கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 61 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  அவர்கள், கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்த மருத்துவப் பரிசோதனை பிப்ரவரி 19 வரை ஆகும் எனவும், அதுவரை அவர்கள் அனைவரும்,  கப்பலிலேயே தங்க வைக்கப்படுவர் எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கப்பலில் மொத்தம் 160 இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை எனவும்  கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில், கப்பலில் இருந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் பினாய் குமார் சர்க்கார் என்பவர் 5 பேருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், எங்களிடம் இதுவரையில் கொரோனா வைரஸ் குறித்து  சோதனை செய்யவில்லை. தயவுசெய்து எப்படியாவது எங்களை காப்பாற்றுங்கள். எங்களுக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது. எங்களை இங்கிருந்து பிரித்து பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என இந்திய அரசாங்கத்திடமும்,  பிரதமர் மோடியிடமும் வலியுறுத்தி கேட்கிறேன், என பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால், கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரிடமிருந்து  கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே, சமையல் கலைஞர்களை மீட்க மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

Related Stories: