மகாராஷ்டிராவில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை: ஒரு வாரத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நாக்பூர்: மகாராஷ்டிராவில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை, ஒரு வாரத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் உள்ள தரோடா கிராமத்தை சேர்ந்தவர் அங்கிதா பிசுடே(25). கல்லூரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதே கிராமத்தை சேர்ந்தவர் விகேஷ் நாக்ராலே(27). இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஆனால் விகேஷின் மோசமான நடவடிக்கைகளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான நட்பை அங்கிதா துண்டித்துக் கொண்டார். விகேஷுக்கு திருமணம் ஆகி 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து அங்கிதா பின்னால் சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 3ம் தேதியன்று அங்கிதா கல்லூரிக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்ற விகேஷ், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அங்கிதா மீது ஊற்றி தீ வைத்தார்.

இதில் உடலின் மேல் பகுதியில் பலத்த காயமடைந்த அங்கிதா, 40 சதவீத தீக்காயங்களுடன் நாக்பூரில் உள்ள ஆரஞ்ச் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், அங்கிதா தற்போது உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை மாலை முதலே அங்கிதா, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அங்கிதாவுக்கு தீவைத்த விகேஷ் கைது செய்யப்பட்டு வார்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, அங்கிதா உயிரிழந்துவிட்ட நிலையில், விகாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: